×

20 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: தமிழக சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் சென்னை, பள்ளிக்கரணையில் 2.5 ஹெக்டேர் நிலப்பரப்பில் 20 கோடி மதிப்பீட்டில் சதுப்புநில சூழலியல் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று, காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சதுப்பு நிலம் வெள்ளத்தை தணித்தல், நிலத்தடி நீர் சேமிப்பை மேம்படுத்துதல், கரிபொருள் வரிசைப்படுத்துதலுக்கு உதவுதல், உயரிய பல்லுயிர்களை ஆதரித்தல், பொழுதுபோக்கு, கல்வி மற்றும் ஆராய்ச்சி பணிகளுக்கு உதவுதல் போன்ற பணிகளுக்கு உதவுகிறது. 700 ஹெக்டேர் பரப்பளவில் பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி சென்னை மாநகரின் இடையே இயற்கை அழகுடன் காணப்படுகிறது. பெருமழைக்காலத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வெள்ளநீர் வடிகால் பகுதியாக இருந்து வருகிறது. இச்சதுப்புநிலம் சுமார் 231 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள நீரை ஒக்கியமடுவு மற்றும் கோவளம் ஆகிய இரண்டு நீர் வெளியேற்றும் கால்வாய் மூலம் வங்காள விரி்குடாவில் கலக்க உதவுகிறது.இங்கு 176 வகையான பறவையினங்கள், 10 வகையான பாலூட்டிகள், 21 வகையான ஊர்வன இனங்கள், 10 வகையான நிலநீர் வாழ்வினங்கள், 50 வகையான மீன் இனங்கள், 9 வகையான நத்தையினங்கள், 5 வகையான ஓட்டுமீன் இனங்கள், 14 வகையான வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்விடமாகவும், ஒட்டுமொத்தமாக 459 வகையான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் பரவலுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது. 2019-20ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி ஏறத்தாழ 2,65,313 பறவைகள் இச்சதுப்பு நிலப்பகுதியில் கண்டறியப்பட்டுள்ளன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடமேற்கு பகுதியில் பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா அமைத்திட தமிழ்நாடு அரசால் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இச்சதுப்பு நிலத்தினை பாதுகாத்திட சுமார் 1,700 மீட்டர் தூரத்திற்கு பாதுகாப்புச் சுவர் கட்டப்பட்டதுடன், பொதுமக்கள் பார்வைக்காகவும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வதின் நோக்கத்திற்காகவும் பசுமையான பொதுஇடம் அமைக்கப்பட்டுள்ளது.மேலும், பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் பயன்பெறும் வகையில், பார்வையாளர்கள் நடைபயிற்சி மேற்கொள்ள சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நடைபாதை, சதுப்பு நிலத்தின் தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் விவரம், மீன் இனங்கள் பட்டாம்பூச்சி வகை, பறவையினங்கள், பல்லுயிர் பரவல் மற்றும் அதன் வளம் குறித்த விவரங்களை விளக்கும் வகையில் கருத்தியல் அடையாளங்கள் மற்றும் மாதிரிகள், சூழலியல் பூங்காவில் அழகியலை மேம்படுத்த வேங்கை, அரசு, செந்சந்தனம், சந்தனம், குமிழ், மகாகனி, வேம்பு, நீர்மருது இலுப்பை போன்ற மண்சார்ந்த 5,000 மரக்கன்றுகள் நடைப்பாதையின் இருபுறமும் நடப்பட்டு பராமரிக்கப்படுகிறது.பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளத்தடுப்பு பணிக்காக தற்போது சுமார் 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதிகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. மேலும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை ராம்சார் சாசனத்தின்படி ஈரநிலமாக அறிவிக்கை செய்ய ஒன்றிய அரசுக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு வருகை தரும் வெளிநாடு மற்றும் உள்ளூர் வலசை பறவையினங்களின் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையினை கருத்தில் கொண்டு பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தினை பறவைகள் சரணாலயமாக அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், சுற்றுச்சூழல் – காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹூ, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அசோக் உபரேதி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரினக் காப்பாளர் சேகர் குமார் நீரஜ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்….

The post 20 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்கரணை சதுப்புநில சூழலியல் பூங்கா: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Schoolhouse Marshland Ecological Park ,CM. G.K. Stalin ,Chennai ,Department of Environment, Climate Change and Forestland ,Tamil Nadu ,Schoolkala Marshland Ecological Park ,CM ,G.K. Stalin ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்